கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள முத்தண்ணன் குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், கிருஷ்ணாம்பதி குளம், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முத்தண்ணன் குளத்தில் மட்டும் ரூ. 60 கோடியில் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல், புல்வெளி, ராட்சத கொரில்லா குரங்கு உருவச்சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் விளையாடி மகிழ சிந்தட்டிக் கூடைப்பந்து மைதானமும் உள்ளது. முத்தண்ணன் குளம் நிறைந்து வெளியேறும் உபரி நீர் ராஜ வாய்க்கால் மூலம் உக்கடம் பெரிய குளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் தினமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், குப்பைகளை வாய்க்காலில் வீசிச் செல்கின்றனர். சிலர் குளக்கரையின் ஒரு பகுதியில் குப்பைகளை வீசுகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.