கோவை புறநகர்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்த வீடு புகுந்து திருடும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சரவணன் ஆகியோரை விசாரித்ததில், அவர்களிடம் சுமார் 40 சவரன் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள் இல்லாத வீடுகளைக் குறிவைத்து கதவை உடைத்து திருடுவது இவர்களின் வழக்கமாக இருந்தது என போலீஸார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.