கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (41). இவர் நேற்று முன்தினம் பைக்கில் சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரியும், பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் முன்னால் சென்ற ஸ்கூட்டரும், பைக்கும் மோதியது. இந்த விபத்தில் பாலமுருகன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பாலமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த போத்தனூர் வெள்ளலூர் அபிராமி கார்டனை சேர்ந்த மோகனாம்பாள் (40) மற்றும் அவரது மகள் நிகல்யா (21) ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.