கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் ஆணையத்திடம் அளித்த 250 பக்க கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் உள்ளதாகவும், விதிமுறைகளின்படி அதை வெளியில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக அல்ல என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த விவகாரம் குறித்து, இதுகுறித்து பின்னால் தெரிந்து கொள்வீர்கள், நல்லதே நடக்கும் என கூறினார். அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் நிலவுவதாக குற்றம்சாட்டிய அவர், மகன், மைத்துனன், மருமகன் என அனைவரும் கட்சியில் தலையிடுகின்றனர்; இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக உள்ளது என்றார். பாஜக தன்னை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், யாரும் என்னை இயக்க முடியாது என தெரிவித்தார். அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் குறித்து அது அவருடைய விருப்பம் எனக் கூறிய செங்கோட்டையன், அதிமுக தரப்பிலிருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு உறுதியாக நடக்கிறது, ஆனால் யார் பேசுகிறார்கள் என்பது வெளியில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.