கோவை: ரயில் மறியல் முயற்சி-30 விவசாயிகள் கைது

63பார்த்தது
கோவை: ரயில் மறியல் முயற்சி-30 விவசாயிகள் கைது
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

 இதனையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். 

அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் ரயில் நிலையத்தில் புகுந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 விவசாயிகளை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி