கோவையை அடுத்த வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் வழக்கமாகச் செல்லும் ஒரு பேக்கரியில், நேற்று தின்பண்டம் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவர்கள் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, உரிமையாளருக்குத் தெரியாமல் தின்பண்டத்தை எடுத்துச் சாப்பிட முடியுமா என்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், தான் அவ்வாறு செய்வதாக பந்தயம் கட்டினான். அதன்படி, அந்தச் சிறுவன் பேக்கரியில் தின்பண்டம் திருடினான்.
மீண்டும் அவன் பேக்கரிக்கு வந்தபோது, உரிமையாளர் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்தார். முதலில் திருட்டை மறுத்த சிறுவன், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் காண்பித்ததும் ஒப்புக்கொண்டான். இதற்கிடையே, ரோந்து வந்த போலீசாரிடம் பேக்கரி உரிமையாளர் சிறுவனை ஒப்படைத்தார். போலீசார் புகார் மனு ரசீது பதிவு செய்து, சிறுவனையும் அவனது நண்பர்களையும் இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.