ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், முதல் தர கொப்பரையின் விலை கிலோவுக்கு 207.00 ரூபாய் வரை உயர்ந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் 179 கொப்பரை மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வாரம், 31 விவசாயிகள் தாங்கள் விளைவித்த கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
மொத்தம் 80.55 குவிண்டால் கொப்பரை, 14.10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஏலம் விடப்பட்டது. 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலத்தில் விடப்பட்ட 63 மூட்டை முதல் தர கொப்பரை, கிலோவுக்கு குறைந்தபட்சம் 198.16 ரூபாய் முதல் அதிகபட்சம் 207.00 ரூபாய் வரை விலை பேசியது. இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இரண்டாம் தர கொப்பரை வகையைச் சேர்ந்த 116 மூட்டைகள் ஏலம் விடப்பட்டன. இவற்றின் விலை கிலோவுக்கு 122.00 ரூபாய் முதல் 174.10 ரூபாய் வரை இருந்தது. இந்த தகவல்களை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார். கொப்பரை விலை உயர்வு, தேங்காய் விவசாயிகளுக்கு புத்துணர்வை அளிப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.