கோவையில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் வேலை செய்யும் இடத்திலேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்புக்கடையைச் சேர்ந்த 34 வயதான முஜிபுர் ரகுமான், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முஜிபுர் ரகுமானைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியக்கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.