கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்மஸ் பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நடத்தி வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பிரிந்து வாழும் என் மனைவி மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலினால்தான் சிறுமிகள் வைத்து என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.