பெங்களூருவிற்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே போத்தனூர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, ரயில் எண் 06555 (பெங்களூரு - திருவனந்தபுரம்) வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:00 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 2:00 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் சனிக்கிழமை காலை 4:48 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06556 (திருவனந்தபுரம் - பெங்களூரு) ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2:15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு திங்கள்கிழமை காலை 7:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:58 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் வர்கலா, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.