நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் தலைப்பை இரண்டு வானம் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கோவை மாவட்டம் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய விஷ்ணு விஷால், இது ராட்சசன் 2 திரைப்படம் அல்ல என்றும், ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார். மேலும், இப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படம் என்றும், 21 படங்களுக்குப் பிறகு தான் ஒரு முழு நீள காதல் படத்தில் நடித்திருப்பதாகவும், இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
நடிகை மமிதா பேசுகையில், இந்த படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் இணைந்து பணியாற்றியது போன்ற உணர்வை அளித்ததாகவும், படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்கும் ஜனநாயகன் படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.