கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில ஊராட்சிகளில் தனிநபர்களால் குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகள் சேதப்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
இதைத் தடுக்கும் பொருட்டு, கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள், தரைமட்ட தொட்டிகள், குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகள் உள்ளிட்ட ஊராட்சிச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று எச்சரித்துள்ளார். மேலும், குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகளை சேதப்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது ஒன்றிய அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.