கோவை மாவட்டம் சூலூர் அருகே மோப்பிரிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பெற்றுத்தந்தது போன்றவை எடப்பாடி அரசின் சாதனைகள் எனவும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் கோவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி, இதுகுறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ வி.பி. கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.