எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழகத்தில் அவசரகதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என கோவை குனியமுத்தூரில் வலியுறுத்தினார். மேலும், கோவை, மதுரை போன்ற தொழில் வளர்ச்சி மிகுந்த நகரங்களுக்கு மெட்ரோ திட்டம் வழங்காமல் புறக்கணிப்பது தமிழகத்தின் மீது காட்டப்படும் ஓரவஞ்சனை என்றும், ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரினார். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் விரோதக் கறுப்புச் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதல் என்றும், எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர் நலன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.