நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர், கோவை சரவணம்பட்டியில் மேன்ஷனில் தங்கிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார்.
அதில் அறிமுகமான நபர் ஒருவர், அவரை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார். அந்த வாலிபரும் காளப்பட்டி ரோடு, மகாநகர் வனப்பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அந்த நபரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.
பின்னர் ஜிபே-வில் உள்ள வங்கி கணக்கின் பாஸ்வேர்ட்டை கேட்டனர். ஆனால் அவர் அதனை கூறமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அந்த வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர். பின் அந்த கும்பல், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது பைக்கை பறித்து அங்கிருந்து தப்பி சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் பலத்த காயம் அடைந்த வாலிபரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.