கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் பேரலீஸ் நிலையம் முன்பு வந்ததும் தன்னுடைய கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பவழக்கடை தெருவை சேர்ந்த பாண்டியன் (40) என்பதும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சினை இருந்து வந்ததும் தெரிந்தது. மேலும் அந்த பிரச்சினையை தீர்க்க முடியாததால் தான் தீக்குளிக்க முயன்றால் அந்த நபர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கருதி தீக்குளிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீக்குளிக்க முயன்ற பாண்டியனை கைது செய்தனர்.