கடலூர் மாவட்டம் வன்னியர்பாளையம் பள்ளிக்கூடத் தெருவில் ஒரு வீட்டிற்கு ஐந்து பெண் ஊழியர்கள், நான்கு ஆண் ஊழியர்கள் கும்பலாக சென்று நிலுவை வரித்தொகையை செலுத்துமாறு கேட்டனர்.
வீட்டில் இருந்தவர்கள், இந்த மாதத்திற்குள் செலுத்தி விடுவதாகக் கூறியதை கேட்காத மாநகராட்சி பெண் ஊழியர்கள் வாய்க்கு வந்தபடி திட்டி கடப்பாரையால் வீட்டை உடைப்போம் என மிரட்டினர். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்த கவுன்சிலர்கள் கடந்த கூட்டத்தில் நிலுவைத் தொகை வசூலிப்பதாகக் கூறி யாரிடமும் அத்துமீறக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மீண்டும் அடாவடி செய்து வசூல் வேட்டையில் இறங்கி இருப்பது மாநகர மக்களை அச்சமடையச் செய்துள்ளது.