தர்மபுரி நகராட்சியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ. ஜெட்டியள்ளி, சோகத்தூர், இலக்கியம்பட்டி, தடங்கம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 3) காலை ஏ. ஜெட்டியள்ளி கிராம ஊராட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மகளிர் தங்கள் கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் என்பதால் தங்களது கிராம ஊராட்சியை நகராட்சியுடன் தமிழக அரசு இணைப்பதை கைவிட கோரி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவ்வை வழி சந்திப்பு சாலையில் உள்ள தர்மபுரி - சேலம் முக்கிய சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இந்த மறியல் போராட்டம் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட மகளிரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மகளிர் கூட்டம் கலைந்து சென்றது. இந்த மறியல் போராட்டத்தால் தர்மபுரி - சேலம் பைபாஸ் சாலையின் இருபுறமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.