தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சித்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தின் வளத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறு உரமிடுவதன் மூலம், உரச்செலவை கணிசமாக குறைக்க முடியும். இது மண்வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதிக மகசூலையும் தரும்.
கிராமங்களின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ், விவசாய நிலங்களில் இருந்து மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. மண் பரிசோதனை மூலம், மண்ணின் தன்மை மற்றும் அதில் உள்ள சத்துக்களின் அளவை விவசாயிகள் அறிந்துகொள்ளலாம்.
இதன் மூலம், தங்கள் மண்ணுக்கு ஏற்ற பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய முடியும். ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 10 முதல் 20 இடங்களில் இவ்வாறு மாதிரிகள் சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒன்றாக கலந்து, அதிலிருந்து 1 கிலோ வரை மண் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் நேரடியாகவோ அல்லது நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலமாகவோ, மண் மற்றும் நீர் மாதிரிகளை கொடுத்து பரிசோதனை முடிவுகளை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.