தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ், இன்று வழங்கினார். இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்டத்தில் 165 திருநங்கைகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் திட்டத்தில் 27 திருநங்கைகள் மாதம் ரூ. 1,500/- பெற்று வருகிறார்கள்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை 95 திருநங்கைகளுக்கும், குடும்ப அட்டைகள் 100 திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சுயதொழில் மானியம் திட்டத்தில் 4 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு இதில் 2 நபர்கள் ஆட்டோ ஓட்டுனராகவும், 2 நபர்கள் துணிக்கடை நடத்தி வருகிறார்கள். இன்றைய தினம் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் குறைதீர்ப்பு முகாமில், திருநங்கை பயனாளிகளில் 6 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், 32 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.