திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், உணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவர்களிடம் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.