தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளைக் களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 320 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றைய கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 1,244 பயனாளிகளுக்கு ரூ.31.30 இலட்சம் மதிப்பீட்டிலும், திருமண உதவித்தொகை 118 பயனாளிகளுக்கு ரூ.23.43 இலட்சம் மதிப்பீட்டிலும், இயற்கை மரணம் நிவாரணம் 7 பயனாளிகளுக்கு ரூ.3.15 இலட்சம் மதிப்பீட்டிலும், விபத்து மரணம் நிவாரணம் 2 பயனாளிகளுக்கு ரூ.4.10 இலட்சம் மதிப்பீட்டிலும், கண் கண்ணாடி உதவித்தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.3,500 மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 1,373 பயனாளிகளுக்கு ரூ.62.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) வினோதினி பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.