திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காவல்துறை சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் பரிசு பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் பால்தாமஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னாள் ராணுவ வீரர் மாறவர்மன், சுகாதார ஆய்வாளர் முனியப்பன், ஆசிரியர் பெரியசாமி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கல்பனா ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மாணவர்களுக்கு பாசி அணிவித்து மகிழ்வித்தார். அரசு பள்ளி மாணவர்கள் நன்கு படிக்கவும், பள்ளி இடைநிறுத்தம் செய்யாமலும், எதிர்காலத்தில் உயர்ந்த பொறுப்புகளுக்கு வரவும் முத்துக்குமார் வாழ்த்தினார். சமூக ஆர்வலர்களின் இந்த தன்னார்வ சேவைக்கு திண்டுக்கல் நகர் தெற்கு காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.