தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி, அதனை உயர்த்தி வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு பலருக்கும் கிடைக்காத நிலையில், வருவாய் துறை மூலம் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.1500, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தற்போதைய விலைவாசிக்கு ஏற்புடையதாக இல்லை. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் ரூ.6000 முதல் ரூ.15,000 வரையிலும், தெலுங்கானா, டெல்லி, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களிலும் தமிழகத்தை விட அதிக உதவித்தொகை வழங்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.