இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளில் பிரதி மாதம் தலா ரூ. 1000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழித் திறனறித் தேர்வில் திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் பள்ளியைச் சேர்ந்த 158 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 79 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர்.
இதன் மூலம் மாநில அளவில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ஆம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தது. இதையடுத்து, தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், புனித மரியன்னை அரசு மேல்நிலைப் பள்ளியின் அதிபர் ஆர். மரிவளன், தாளாளர் எஸ். மரியநாதன், தலைமையாசிரியர் எம். ஆரோக்கியதாஸ் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.