வடமதுரையில் எரியோடு நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக பிரிந்து போகும் கிராம சாலையில் ரெட்டியபட்டி என்ற கிராமத்தை அடுத்து வறட்டாறு ஓடுகிறது. இப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ஆற்றை கடந்து வடமதுரை வந்து அதன்பின் திண்டுக்கல் செல்கின்றனர்.
காரணம் கொம்பேறிபட்டியில் இருந்து தென்னம்பட்டி சுற்றி வடமதுரை வந்தால் 10 கிலோமீட்டர் ஆகும். அதேசமயம் பிலாத்தில் இருந்து இந்த கிராம சாலையில் ஆற்றை கடந்து குறுக்கே ரெட்டியபட்டி வழியாக வடமதுரை நகர் பகுதியை எளிதில் 5 கிலோமீட்டர் அளவில் அடையலாம். ஆனால் மழைக்காலங்களில் சுமார் 30 அடி ஆழமுள்ள ஆற்றில் இறங்கி ஏறி மறுகரையை அடைய இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த ஆற்றில் பாலம் கட்டி தர கோரி இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பாலம் அமைத்து தரப்படவில்லை.