திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி மஞ்சளாறு ஆறு படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும், வத்தலகுண்டு, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் மஞ்சளாறு, ஆக்கிரமிப்புகளால் சுமார் 400 அடி அகலத்திலிருந்து 100 அடி முதல் 25 அடி வரை சுருங்கி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் வரும் காலங்களில் நீரின் திசை மாறி விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளதாகவும், கணவாய்ப்பட்டி கண்மாய் அணைப்பகுதியில் ஆற்றின் நடுவே பாறாங்கற்களை கொட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.