திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பிலும், நகராட்சி சார்பிலும் இந்த ஏரியில் படகுகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு படகு சவாரி செய்து மகிழ்வர். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நட்சத்திர விடுதி அருகேயும், பிரையண்ட் பூங்கா அருகேயும் இரண்டு படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு துடுப்புப் படகு, பெடல் படகு, சிக்கார் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு படகு குழாம்களிலும் உள்ள தரைத் தளங்கள் (லேண்டிங்) சேதமடைந்து ஏரியின் நீர் உள்ளே தேங்கியுள்ளது. இதனால், குழந்தைகள், முதியவர்கள் கீழே விழும் நிலை உருவாகியுள்ளது. கோடை விடுமுறை சீசன் காலங்களில் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். எனவே, சேதமடைந்த இந்த படகு குழாமைச் சீரமைக்கவும், இந்தக் குழாமின் இடத்தை விரிவுபடுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.