கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலர்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் பாபு, நகராட்சி ஆணையர் சத்தியநாதன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ராதாகிருஷ்ணன், பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ஆண்டுதோறும் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நிகழாண்டிலும் மலர்க் கண்காட்சி விரைவில் நடத்தப்படவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சால்வியா, டெலிபினியம், ஜெனியா, பிங்கோஸ்டர், பென்ஸ்டீமன், வொபினா போன்ற மலர்ச் செடிகள் கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடவு செய்யப்பட்டன.மலர்க் கண்காட்சியில் மயில், திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யா கனி, செல்பி பாயிண்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களான உருவ அமைப்புகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காய் கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு, ஆரஞ்சுப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ணகிளி ஆகியவையும் மலர்க் கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது என்றார்.