திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவு, வெளி நோயாளி பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறுகால கவனிப்பு அறை, பேர் கால சிகிச்சை, ரத்த சுத்திகரிப்பு மையம் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரப்பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
மேலும் அண்ணா சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு கீழ்மலை மற்றும் மேல்மலை கிராமங்களில் இருந்து பேருந்தில் வரும் நோயாளிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் பாதை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் அண்ணா சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவகங்களிலிருந்து வரும் கழிவுநீர் திறந்தவெளியில் அப்பாதையில் ஓடுவதால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மூக்கை போர்த்திக் கொண்டு நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் நோய் தொற்றுடன் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மேலும் மாவட்ட மருத்துவ உயர் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுகாதார சீர்கேடுடன் இருக்கும் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.