திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 50 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 28 விடுதிகள் மற்றும் மாணவிகளுக்கு 13 விடுதிகள், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஒரு விடுதி மற்றும் மாணவிகளுக்கு 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.06.2025 தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025 தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.