திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சம்பவம் நடந்ததும், குடும்பத்தினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்த போதிலும், குழந்தையின் நிலை மேலும் மோசமடைந்து உயிரிழந்தது. குழந்தையின் திடீர் மரணத்தால் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் மரணத்திற்கு காரணமான நிலையை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அதிகாரிகள் குழந்தையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையின் திடீர் மரணம் உள்ளூர் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.