ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட எண்ண மங்கலத்தை சேர்ந்தவர் அம்மாசை (35). கடந்த மே 25-ல் வன உயிரின குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது பிற வனச்சரகங்களில் வன உயிரின குற்றம், சந்தன மரக்குற்றம், கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக பல வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் கலெக்டர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வன உயிரினங்கள், நாட்டு வெடிகுண்டு, கன்னி வகை பொறிகள், சட்டத்துக்கு புறம்பாக மின்வேலியின் மின்சாரம் செலுத்தி வன உயிரினங்களை கொல்லுதல், நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் வன குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட நபர்களே தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.