ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே மாசூர், அடைப்பு தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). நேற்று (ஜூன் 6) இரவு அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி (42), குருசாமி (50) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வேலை விஷயமாகச் சென்று கொண்டிருந்தார். நரசிம்மமூர்த்தி வண்டியை ஓட்டினார். குருசாமி, சிதம்பரம் ஆகியோர் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் வெள்ளிதிருப்பூர் - மாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையின் எதிர்ப்புறம் அந்தியூர் அடுத்த சங்கராபாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (40) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வெள்ளிதிருப்பூர் - மாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது முருகேசன் வந்த மோட்டார் சைக்கிளும், சிதம்பரம் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நரசிம்மமூர்த்தி, குருசாமி, முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டுச் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.