ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம், கருங்கல்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கலைஞர் நகர், ராஜகோபால் தோட்டம், கல்லுப் பிள்ளையார் கோவில் வீதி, வண்டியூரான் கோவில் வீதி, திருநகர் காலனி, சின்ன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 60 லட்சம் மதிப்பில், கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.
இக்கட்டிடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டிடத்தில், கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேனர், பிரசவ அறை சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் உள்ளன. இக்கட்டிட திறப்பு நிகழ்ச்சியில், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே, கர்ப்பிணி பெண்களுக்கு பேரிச்சம்பழம், நெய், ஊட்டச்சத்து பெட்டகமானது வழங்கப்பட்டது.