ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கருங்கல்பாளையம் போலீசார், கே.என்.கே ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுப்பையா வீதி பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்ட அதேப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (70) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு தாலுகா போலீசார், கருக்கம்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சட்ட விரோத மது விற்பனை செய்வதற்காக, மது பாட்டில்கள் கொண்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் (60), நொச்சிக்காட்டு வலசைச் சேர்ந்த சக்திகுமார் (42) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 26 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பவானிசாகர் அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட பொன்னம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்துகுமார் (39) என்பவரை கைது செய்த புளியம்பட்டி போலீசார், அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.