சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதை அடுத்து அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 30ஆம் தேதி ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையேயான பயணிகள் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக வாகனங்களில் சென்று வந்தனர். மேலும் பஸ் பயணிகள் மேட்டூர் மற்றும் கோனேரிப்பட்டி கதவணை பாலத்தின் வழியாக சென்றனர். இதன் காரணமாக அவர்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கர்நாடக மாநில பகுதியில் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 36,000 கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் நெரிஞ்சிப்பேட்டை-பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.