சென்னிமலை பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்களாதேசத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதேபோல் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வடமாநிலத்தவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் வங்களாதேசம் நாட்டைச் சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக குடியேறி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிக்யூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் வங்களாதேசத்தைச் சேர்ந்த முகமது நைம் உசேன் (18), முகமது மினார் ஓசைன் (28), முகமது டோரிகுல் இஸ்லாம் (32) மற்றும் முகமது குட்டுஸ் ஓசைன் (31) ஆகிய நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக தங்கி கூலி வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.