சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பண்ணாரி சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரு வேன் பண்ணாரி சோதனை சாவடி அருகே வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட 110 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ. 75 ஆயிரம் ஆகும். இதை எடுத்து வாகனத்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் தொட்டிபாளையம் பழனிசாமி நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரைப் பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் மனோஜ் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.