ஆசனூர்: வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு

66பார்த்தது
ஆசனூர்: வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகவனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கும் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புத் துண்டுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. அந்த வழியாக வந்த கார், அரசுப் பஸ், லாரிகளை வழிமறித்து கரும்புக் கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.