இலவச வீட்டு மனை பட்டா தராததால் அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயற்சி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். பல ஆண்டுகளாகவும் வழங்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், தொப்பம்பாளையம், கணபதிநகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க, பொருட்களுடன் நேற்று காலை திரண்டனர். தகவலறிந்து பவானிசாகர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து, குச்சிகளை நடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திகிரி டி.எஸ்.பி. சரவணன், சந்திகிரி தாசில்தார் சக்திவேல் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் கூறியதாவது: "வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் 'இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்' என்று அனுப்பி விடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்." இவ்வாறு கூறினர்.