தாளவாடி அருகே ஆசனூரில் உள்ள கும்பேஸ்வரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா நேற்று முன்தினம் மாலை அலங்கார பூஜையுடன் தொடங்கியது. நள்ளிரவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கும்பேஸ்வரசுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மாலை 5 மணியளவில் தேர் கோவிலை வந்தடைந்தது. ஆசனூர், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.