ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை, திம்பம் மலைப்பாதை கொண்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். யானை கூட்டங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதும் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதையாக இருந்து வந்தது. புலி, சிறுத்தை, யானை நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டாலும் கரடி நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் கரடிகள் அவ்வளவு எளிதாக வனப்பகுதியை விட்டு வெளியே வராது. இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதையில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை விநாயகர் கோவில் அருகே திடீரென வனப்பகுதியிலிருந்து இரண்டு கரடிகள் ஜோடியாக சாலையை கடந்து சென்றது.
கரடிகள் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர். அங்குள்ள வாகன ஓட்டிகள் கரடிகள் சாலை கடக்கும் காட்சியை தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கரடிகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.