பசுமையாக மாறிய திம்பம் மலைப்பகுதி

50பார்த்தது
பசுமையாக மாறிய திம்பம் மலைப்பகுதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதி 1,105 மீட்டர் உயரம் கொண்டது. இது பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதையின் இரு பக்கமும் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 

இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், மான்கள், புலிகள், அரிய வகை குரங்குகளாக கருதப்படும் அனுமன் மந்தி போன்ற விலங்குகள் உள்ளன. இதனால் திம்பம் மலை ரோட்டில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வறண்டு கிடந்த திம்பம் மலைப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. 

செடி, கொடிகள் வளர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. 18-வது கொண்டை ஊசி வளைவை கடந்ததும் ஜில் என்று காற்று வீசி வருகிறது. இதை பார்த்து ரசிக்க திம்பம் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வாகனங்களில் தங்கள் குடும்பத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பகுதியில் நிலவும் குளுகுளு தட்பவெப்ப நிலையை அனுபவித்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி