ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் சிலர் வாகன விதிமுறைகளை மீறி செயல்படுவதால் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதனை அடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மாநகர் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். மொபைல் போன் பேசிபடி வாகனத்தை இயக்கியதாக 35 வழக்குகள், அதிவேகமாக சென்றதாக இரண்டு வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 937 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் சென்றது தொடர்பாக 15 வழக்குகள், குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 94 வழக்குகள், உரிமம் இல்லாமல் சென்றது தொடர்பாக 6 வழக்குகள் உள்பட 1,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 35 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.