கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் திமுகவினர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கின்றனர் என முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன் மற்றும் கே.வி.ராமலிங்கம் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை ஆதரித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவரும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் மற்றும் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி உடன் இன்று மனு அளித்தனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க படிவங்களை அதிகாரிகள் முறையாக வழங்கி வருவதாகவும், இதை பாராட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பணி சிறப்பாக நடைபெற மனு அளிப்பதாகவும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு உதவ தங்கள் கட்சி நினைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்கள் பூர்த்தி செய்வதற்கும், ஆவணங்கள் பெறுவதற்கும் தங்கள் பூத் லெவல் முகவர்கள் உதவுவார்கள் என்றும் கூறினர்.