ஈரோடு: குப்பை கிடங்கு தீ விபத்து; பொதுமக்கள் அவதி

67பார்த்தது
ஈரோடு: குப்பை கிடங்கு தீ விபத்து; பொதுமக்கள் அவதி
ஈரோடு வெண்டிபாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம், மோளக்கவுண்டம்பாளையம், கோணவாய்க்கால், காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சூழ்ந்தது. குப்பைக் கிடங்கு ஊழியர்கள் அளித்த தகவலின்படி, ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து முதலில் இரண்டு வாகனங்களிலும், பின் கூடுதலாக மூன்று வாகனங்களிலும் வந்த 25 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இருப்பினும், அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ பரவிக்கொண்டே இருந்தது. இதனிடையே, மாநகராட்சி ஆணையர் அர்பித்ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, பணிகளை துரிதப்படுத்தினர். பின், சுமார் 7 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை மட்டும் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். 

இருப்பினும், புகை மட்டும் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இந்தப் புகை தீயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் பணியை, தீயணைப்பு வீரர்கள் துவங்கினர். நேற்று முன்தினம் மாலையில் இருந்து துவங்கி, நேற்று மதியம் மூன்று மணிக்கு நிறைவடைந்தது. புகை முழுவதும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கிடங்கில் இருந்த குப்பைகள் அனைத்தையும் ஈரமாக்கும் பணிகளும் நடந்து முடிந்தது.

தொடர்புடைய செய்தி