ஈரோடு அருகே உள்ள பெரிய செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 35). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் (டிசம்பர் 29) சங்கீதா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதனால் செல்லதுரை வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 30) சங்கீதா தனது கணவருக்கு போன் செய்துள்ளார். வெகுநேரம் ஆகியும் செல்லதுரை போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து தனது வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது செல்லதுரை வீட்டில் ஹாலில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், செல்லதுரை நிதி நிறுவனத்தை நடத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளதும், இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டு மிகுந்த மனவேதனை அடைந்து தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.