ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் கோயிலில், ரூ. 7 கோடி மதிப்பில், பக்தர்களுக்கான மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும் என கடந்த டிசம்பர் மாதம், தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், அந்த இரு கோயில்களில், முடிக்காணிக்கை மண்டபம், பக்தர்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல், காவேரி படித்துறையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் உடைகளை அகற்றுவதற்கு துணி சேகரிக்கும் இடம், தேவையான தூய்மைப்பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை) மணிவாசன், கோயில்களில் நேற்று நேரில் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோயிலைச் சுற்றி தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக்கொள்ள தேவையான மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்திடவும், இக்கோயிலின் தலவிருச்சமான வன்னி மரத்தினை திசு வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்து வளர்த்திடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வடிவமைப்பு பொறியாளர்களுக்கு, அவர் அறிவுறுத்தினார்.