ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் மலைக் கிராமம் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், வாழைகளை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். நடராஜ் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் 4 ஏக்கரில் கரும்புகளை பயிரிட்டு உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல அவர் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 3 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கூட்டம் நடராஜின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
திடீரென சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நடராஜ் டார்ச் லைட்டை எடுத்துத் தோட்டத்தில் பார்த்தபோது காட்டு யானைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைப் பார்த்து நடராஜ் கூச்சலிட்டார். அருகில் தோட்டத்தில் இருந்த விவசாயிகள் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானைகள் கூட்டம் கரும்பு தோட்டத்திலேயே சுற்றி சுற்றி வந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடித்தும், அதிக சத்தங்களை எழுப்பியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒரு வழியாக இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை 5 மணிக்கு அந்த 5 காட்டு யானைகளும் கரும்பு தோட்டத்திலிருந்து வெளியேறின. சேதப்படுத்திய கரும்புக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி நடராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.